கழக கண்மணிகளே, உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே,
வணக்கம்.
நெடு நாட்களாக வீட்டு பணிச்சுமை காரணமாக பதிவுகள் இட இயலவில்லை. மன்னிக்கவும். அதனை சரி செய்ய, முன் போலவே காமிக்ஸ் திரைப்படம் ஒன்றினை பதிவாக இடுவதே சரி என்று தோன்றியது. அதனால் தான் நான் எண்ணி வைத்து இருந்த இரண்டு பதிவுகளை இடாமல், இந்த திரைப்பட பதிவை இடுகிறேன்.
மினி லயன் காமிக்ஸ் மூலமாக உலகத்தின் சில அரிய காமிக்ஸ் படைப்புகளை திரு விஜயன் அவர்கள் நமக்கு அறிமுகம் செய்து வைத்து இருந்தார். இந்த கதைகள், இந்தியாவிலேயே, ஏன் ஆசியாவிலேயே (?!?) தமிழ் மொழியில் தான் வெளியிடப் பட்டன என்பது தமிழர்களாகிய நமக்கு பெருமை சேர்க்கும் விடயம் ஆகும். அந்த அரிய கதாபாத்திரங்களில் ஒன்று சுஸ்கி மற்றும் விஸ்கி ஆகும். தமிழில் இது வரை வந்த சுஸ்கி மற்றும் விஸ்கி கதைகளின் பட்டியல் இதோ:
எண் | இதழ் | தலைப்பு | புத்தக அளவு | புத்தக அமைப்பு | விலை |
1 | ஜூனியர் லயன் & மினி லயன் | ஒரு பேரிக்காய் போராட்டம் | பாக்கெட் சைஸ் | முழு வண்ணம் | Rs 2.50 |
2 | மினி லயன் | ராஜா, ராணி & ஜாக்கி | B-5 நார்மல் சைஸ் | இரு வண்ணக் கலவை | Rs 2.00 |
3 | மினி லயன் | பயங்கரப் பயணம் | B-5 நார்மல் சைஸ் | இரு வண்ணக் கலவை | Rs 2.00 |
இதில் கொடுமையான விடயம் என்னவெனில் என்னிடம் இந்த மூன்று புத்தகங்களில் ஒன்று கூட இப்போது கைவசம் இல்லை என்பது தான். என்ன செய்வது? அதனால் என்னை நானே சமாதானம் செய்து கொள்ள இந்த தொடரின் ஆங்கிலத்தில் வந்த கதைகள் அனைத்தையும் என்னுடைய நண்பர் ஒருவர் மூலம் சிங்கப்பூரில் இருந்து வரவழைத்து வாங்கிவிட்டேன்.
இந்த படத்தில் இருப்பவர் தான் சுஸ்கி மற்றும் விஸ்கி கதைகளின் கதாசிரியர் வில்லி வாண்டர்ஸ்டீன் (Feb 15, 1913 – Aug 28, 1990). ஐம்பது வருடங்களாக இவரின் காமிக்ஸ் புத்தகங்கள் உலக அளவில் இருநூறு மில்லியன் புத்தகங்கள் விற்கப் பட்டுள்ளன என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இவரின் சுஸ்கி மற்றும் விஸ்கி கதை புத்தகங்களே இப்போதும் வருடத்திற்கு ஐந்து மில்லியன் வரை விற்பனையாகின்றன. முதன் முதலில் சுஸ்கி மற்றும் விஸ்கி கதைகள் வெளிவந்தது 1945ம் ஆண்டு ஆகும். அன்று முதல் இன்று வரை சுஸ்கி மற்றும் விஸ்கி கதைகள் மொத்தம் 308 வெளிவந்தது உள்ளன. உலக நாடுகளில் பலவற்றிலும், பல மொழிகளிலும் வெளி வந்த ஒரு கதை சுஸ்கி மற்றும் விஸ்கி ஆகும். இதோ அந்த தொடரின் மொழி பெயர்ப்பு விவரங்கள்:
S.No | Country | Language | Character Title |
1 | Dutch (Origin) | Dutch | Suske & Wiske |
2 | Africa | Afrikaans | Neelsie & Miemsie |
3 | Taiwan | Taiwanese | Dada & Beibei |
4 | China | Mandarin | Bo bu & Bo be te |
5 | Denmark | Danish | Finn & Fiffi (later: Bob & Bobette) |
6 | Finland | Finnish | Anu & Antti |
7 | France | French | Bob & Bobette |
8 | Germany | German | Ulla & Peter (later: Bob & Babette/Suske & Wiske/Frida & Freddie) |
9 | Rome | Greek | Bobi & Lou |
10 | Indonesia | Indonesian | Bobby & Wanda |
11 | Italy | Italian | Bob & Bobette |
12 | Japan | Japanese | Susuka & Wisuka |
13 | Norway | Norwegian | Finn & Fiffi |
14 | Portugal | Portuguese | Bibi & Baba |
15 | Brazil | Brazil | Zé & Maria |
16 | Spain | Spanish | Bob & Bobet |
17 | South Africa | Swahili | Bob & Bobette |
18 | Sweden | Swedish | Finn & Fiffi |
19 | Tibet | Tibetan | Baga & Basang |
20 | Brittan | English | Spike & Suzy |
21 | U.S.A | English | Bob & Bobette / Willy & Wanda |
22 | India | Tamil | Suski & Wiski |
இப்போது இந்த பதிவின் மையக்கருவான சுஸ்கி & விஸ்கி காமிக்ஸ் திரைப்படத்திற்கு வருவோம். த டார்க் டையமண்ட் என்ற பெயரில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தின் டீ.வீ.டி'யின் முன் பக்க மற்றும் பின் பக்க படங்கள்:
சுஸ்கி & விஸ்கி: த டார்க் டையமண்ட் பட டீ.வீ.டி'யின் முன் பக்கம் |
சுஸ்கி & விஸ்கி: த டார்க் டையமண்ட் பட டீ.வீ.டி'யின் பின் பக்கம் |
கதை: சுஸ்கி & விஸ்கி தங்களின் குழுவினரோடு சம்மர் விடுமுறையை கழிக்க நெதர்லாண்ட் நாட்டில் உள்ள ஒரு மர்ம எஸ்டேட்டுக்கு செல்கின்றனர். அங்கு அகதா ஆண்டி ஒரு மர்ம கருப்பு வைரத்தின் வசியத்தில் மயங்கி தன்னுடைய சுயநிலையை இழக்கின்றார். இப்போது அகதா ஆண்டியை காப்பற்ற வேண்டிய பொறுப்பு நம்முடைய கதாநாயகர்கள் மேல் விழுகின்றது.
அவர்கள் அந்த கருப்பு வைரத்தின் பின்புலத்தை ஆராய்ச்சி செய்து அது பதினைந்தாம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு விசித்திர மந்திரவாதியின் பிடியில் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைகின்றனர். ( AlChemist = மந்திரவாதி, சரிதானே?)
அந்த வைரத்தின் மேல் ஒரு சாபம் இருக்கின்றதையும், அதன் வசியத்தில் தான் அகதா ஆண்டி இருப்பதையும் அவர்கள் கண்டறிகின்றனர். பின்னர், அந்த கருப்பு வைரத்தின் வசியக் கட்டில் இருந்து அகதா ஆண்டியை காப்பாற்ற வேண்டுமெனில் அந்த மந்திரவாதியால் தான் முடியும் என்பதை கண்டுபிடிக்கும் நமது சாகசக் குழுவினர் ஒரு ரகசியத் திறப்பின் மூலம் பதினைந்தாம் நூற்றாண்டிற்கே செல்கின்றனர். பின்னர் அங்கு நடக்கும் சாகசங்களும், வியத்தகு சம்பவங்களும் படத்தின் பிற்பகுதியை அமைக்கின்றன.
படத்தின் சில காட்சிகள்:
சுஸ்கி & விஸ்கி | விஸ்கி | சுஸ்கி & விஸ்கி |
அகதா ஆண்டி & ஆர்வில் அங்கிள் | சுஸ்கி | ஷூடிங்கில் ஒரு காட்சி |
ஷூடிங்கில் ஒரு காட்சி | சுஸ்கி & விஸ்கி குழுவினர் | சுஸ்கி & விஸ்கி குழுவினர் |
இனி இந்த படத்தின் விமர்சனத்திற்கு வருவோம்:
* படத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்று படமாக்கப்பட்ட இடங்கள் ஆகும். மிகவும் சிறப்பான லொகேஷன்களில் படமாக்கப்பட்டு உள்ளது இந்த திரைப் படம். படத்திற்கு வலுவூட்டும் காரணி இதுவே ஆகும்.
* முடிந்த வரை காமிக்ஸ் கதாபாத்திரங்களை நிஜ வாழ்வில் கொண்டு வர முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டு இருகின்றனர். சுஸ்கி & விஸ்கி குழுவினர் நீங்கள் காமிக்ஸ் கதைகளில் எப்படி படித்தீர்களோ அப்படியே இருப்பார்கள்.
* தயவு செய்து இந்த கதையின் பின்புலம் தெரியாமல் இந்த படத்தை பார்க்க வேண்டாம். எனென்றால் இந்த படத்தில் பல திரைக்கதை குறைபாடுகள் இருப்பதால் இந்த கதையை படித்து உணர்ந்தவர்கள் மட்டுமே இந்த படத்தை ரசிக்க முடியும்.
* தயவு செய்து ஹாலிவூட் படங்களை போன்ற ஸ்பெஷல் எபெக்டுகளை எதிர்பார்க்க வேண்டாம். இந்த படம் ஒரு குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப் பட்ட படம் ஆகும்.
* படத்தின் அகஷன் காட்சிகள் மிகவும் குறைவு என்பதோடில்லாமல் அவை படமாக்கப்பட்ட விதமும் சரி இல்லை. ஒரு காமிக்ஸ் படத்திற்கு எப்போதும் அகஷன் காட்சிகள் சிறப்பாக இருக்க வேண்டும்.
* இந்த படத்தின் டீ.வீ.டி உங்களுக்கு இலவசமாக கிடைத்தாலும் வாங்கி விடாதீர்கள். எனென்றால் இதில் உங்களின் பொறுமையை சோதிக்கும் பல "சிறப்பு அம்சங்கள்" உள்ளன. உதாரணமாக முதல் பத்து நிமிடங்களுக்கு பிறகு ஒரு காட்சியில் சுமார் நான்கு நிமிடங்களுக்கு நீங்கள் ஒரு கதவை தொடர்ந்து பார்க்க வேண்டி இருக்கும். நானும் அந்த கதவில் ஏதோ ஒரு சிறப்பு அம்சம் இருக்கும் என்று எண்ணி தொடர்ந்து பார்த்தேன். ஒன்றும் இல்லை. கேமராவை ஆப் செய்ய மறந்து விட்டார்கள் போல இருக்கிறது. இதைப் போல தொடர்ந்து வரும் காட்சிகளில், தரை (இரண்டு நிமிடங்கள்), அறையின் மேற்க்கூரை (மூன்று நிமிடங்கள்) என்று என்னுடைய பொறுமையை தொடர்ந்து சோதித்தால் அதனை நிறுத்தி விட்டேன். மன்னிக்கவும்.
* சுஸ்கி - நடிப்பும் அதற்கேற்ற அருமையான நடிகர் தேர்வும் இந்த பாத்திரத்தை நிறைவு செய்கின்றன. ஆனால் விஸ்கி'யைவிட வயதில் சிறியவனாக இருப்பது ஒரு குறை. இதை குறை என்று கூறுவதை விட, விஸ்கி பாத்திரத்தின் தேர்வு குறை என்று கூறுவதே சாலச்சிறந்தது.
* விஸ்கி - சுஸ்கி'யைவிட வயதில் மூத்து இருப்பதை விட வேறொரு பெரிய குறை உள்ளது. ம், அதை எப்படி சொல்வது? சரி, இப்படி சொன்னால் சரியாக இருக்கும்: விஸ்கி பாத்திரம் ஒரு சிறுமி ஆகும். இந்த படத்தில் ஒரு இளம் பெண் தான் அந்த பாத்திரத்தை ஏற்று இருக்கிறார். அதுவே ஒரு குறை. வாசகர்களுக்கு புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்.
* அகதா ஆண்டி - அய்யகோ, இதை விட கொடுமை வேறு எதுவும் இல்லை. எனென்றால், இந்த பாத்திரத்தை ஏற்று நடித்து இருப்பது ஒரு ஆண் நடிகர் ஆவார். வேறென்ன சொல்ல?
* ஆர்வில் அங்கிள் - படத்தின் ஆரம்பத்திலேயே இவர் "நான் வர மாட்டேன், நான் வர மாட்டேன்" என்று சொல்கிறார். அதை கேட்டு நாமும் இந்த படத்திற்கு செல்லாமல் (பார்க்காமல்) இருந்து இருக்க வேண்டும்.
* வில்பர் - மிகவும் சரியான தேர்வு. ஆனால், காமிக்ஸ் புத்தகத்தை கூர்ந்து படிக்கும் வாசகர்களுக்கு வில்பர் எப்போதும் கண்ணை மூடிக் கொண்டே இருப்பது நன்கு தெரியும். ஆனால், படத்தில் அப்படி இல்லை.
- என் கருத்து: மோசமான இயக்கமும், தரமற்ற எடிட்டிங்'ம் ஒரு நல்ல படத்தை இப்படி "சுமார்" என்ற நிலைக்கு கொண்டு வந்து விட்டது.
- எனது ரேட்டிங்: ********** (5/10).
ஒரிஜினல் கதை புத்தகத்தின் முன் அட்டை | படத்தின் போஸ்டர் விளம்பரம் |
படவிவரங்கள்:
டைட்டில் : த டார்க் டையமண்ட
வருடம் : 18th Feb 2004
ஓடும் நேரம் : 85 நிமிடங்கள்
மொழி : பெல்ஜியம் / ஜெர்மனி
சப்-டைட்டில் : துரதிர்ஷ்டவசமாக, இல்லை
இயக்கம் : Rudi Van Den Bossche
கதை: Patricia Beysens & Ilse Somers
இசை : Brian Clifton
ஒளிப்பதிவு : Gerd Schelfhout
எடிட்டிங் : Ludo Troch
இந்த பதிவை நான்கு வாரங்களுக்கு முன்னர் இட்டு இருந்தால் (18th Feb 2009) சிறப்பு பதிவு என்று கூறி தூள் கிளப்பி இருக்கலாம். என்ன செய்வது? தாமதம் என்ற கொடிய வியாதிக்கு நான் ஆளாகி பல மாமாங்கம் ஆகி விட்டதே?
தொடர்புடைய இணைய தளங்கள்:
IMDB விபரங்கள் & பட கலெக்க்ஷன் விபரங்கள்
பட விவரங்களை தெரிந்து கொள்ள Home Page
டவுன்லோட் செய்ய RapidShare
டவுன்லோட் செய்ய Torrent
மேலும் விபரங்களுக்கு
ஸ்க்ய்லைன் என்டர்டைன்மென்ட் மற்றும் கோ-டூன், லக்ஸ் அனிமேஷன், பாஸ் பிராஸ், வாட் புரடக்ஷன்ஸ் ஆகியவற்றின் கூட்டு தயாரிப்பில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் மொத்தம் பதிமூன்று படங்களை தயாரித்து வெளியிட ஒப்பந்தம் முடிவு செய்யப் பட்டு உள்ளது. இதன் முதல் முயற்சியாக த டெக்சாஸ் ரேஞ்சர்ஸ் என்ற கதையை அனிமேஷன் படமாக இந்த வருடம் ஜூன் மாதம் வெளியிட உள்ளனர். இனிமேல் ஒவ்வொரு வருடமும் ஒரு படம் வரும் என்று எதிர்பார்க்கலாம்.
த டெக்சாஸ் ரேஞ்சர்ஸ் படத்தின் விளம்பரம் | ஒரிஜினல் கதை புத்தகத்தின் முன் அட்டை |
Directed by: Mark Mertens & Wim Bien
Produced by: Eric Wirix
Written by : Dirk Nielandt/Guy Mortier/Eric Wirix
Distributed by: Bridge Entertainment Group
Release date(s): Belgium June 17, 2009
Running time: 86 minutes
Country: Belgium/Netherlands/Luxembourg
Language: Dutch/French
Official Website: http://lukeandlucymovie.com/en/index.html
என்னுடைய பழைய பதிவுகளை இந்த இடைப் பட்ட காலத்தில் பார்த்த நான் மிகவும் வருத்தமுற்றேன். காமிக்ஸ் டாக்டர், ரபிஃக் ராஜா, விஸ்வாஜி, கனவுகளின் காதலன் போன்றவர்கள் மிகவும் சிரத்தையுடன் அழகாக ஒரு ஆராய்ச்சி கட்டுரை போல சிறப்பாக பதிவுகள் இடும்போது என்னுடைய பதிவுகள் அனைத்தும் கற்றுக்குட்டியின் பதிவுகள் போல தோன்றின (அது என்னவோ உண்மை தானே?).
அதனால் இந்த பதிவை மிகவும் சிரத்தையுடன் (எழுத்துப்பிழை, பொருட்பிழை இல்லாமல்), சிறப்பான லே-அவுட் வடிவத்தில் ஒரு முழுமையான பதிவாக அமைத்து உள்ளேன். வாசகர்கள் படித்து விட்டு தங்களின் மேலான கருத்தை சொன்னால் மிகவும் மகிழ்வேன். இந்த பதிவை என்னுடைய பிளாக் குருவான திரு காமிக்ஸ் டாக்டர் அவர்களுக்கு சமர்பிக்கிறேன்.
புதிய வாசகர்கள் என்னுடைய பழைய பதிவுகளை தெரிந்து கொள்ள,
எனது முந்தைய பதிவில் வந்த பட விபரங்கள் |
1. டெக்ஸ் வில்லர் படம் - லார்ட் ஆப் த டீப் |
2. குண்டன் பில்லி - மினி லயன் ஹீரோ படங்கள் |
3. டேன்ஜர் டையபாலிக் - லயன் காமிக்ஸ் ஹீரோ படம் |
4. மதி இல்லா மந்திரி (அ) இஸ்நோகுட் - திரைப்படம் |
5. ரன்-டன்-ப்ளான்:லக்கிலுக்’ன் சக பாத்திரம் |
6. சிஸ்கோ கிட் - அருமையான கௌபாய் படம் |
விரைவில் அடுத்த காமிக்ஸ் படம் மூலம் உங்களை சந்திக்கிறேன்.
நன்றிகள் எனக்கும் பாராட்டுகள் நமக்கும்.
மீண்டும் சந்திப்போம், விரைவில்.
பின் குறிப்பு: இந்த பதிவு சார்பாக வந்த பிற காமிக்ஸ் பதிவுகள்
புருனோ ப்ரேசில் - முதலை பட்டாளம் - மினி லயன் காமிக்ஸ் |