கழக கண்மணிகளே, உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே,
வணக்கம்.
சமீப காலங்களில் என்னால் வலையுலகம் பக்கமே வர இயலவில்லை. மன்னிக்கவும். அதற்குள் பார்த்தால் என்னவெல்லாமோ நடந்து இருக்கிறது. தமிழ் காமிக்ஸ் உலகின் முடி சூடிய மன்னரை காணவில்லை. அவருக்கு தொடர்ந்து விண்ணப்பங்கள் அனுப்பிக் கொண்டே இருக்கிறேன்.
இந்த தருணத்தில் தான் இந்த கதையை படித்தேன். இந்த கதையை விட இதன் பின்புலம் எனக்கு மிகவும் பிடித்தமான் ஒன்றாகும். விடா முயற்சிக்கு விக்கிரமாதித்தனை உதாரணம் கூறுவது அம்புலிமாமா கதை மூலம் தான் பிரபலம் அடைத்தது என்பதை கூறவும் வேண்டுமா என்ன?
ஓவியர் ஷங்கர் அவர்களின் கைவண்ணத்தில் வரையப் பட்ட அம்புலிமாமா விக்கிரமாதித்தன் கதையின் முதல் பக்கங்கள் மற்றும் அந்த வசனமும் ஓவியமும் யாராலும் மறக்க இயலாது. இந்த கதையில் இருக்கும் சித்திரங்கள் அவற்றில் ஒரு பங்கு அளவுக்கு கூட இல்லை என்றாலும் இந்த கதை தொடர் காமிக்ஸ் வடிவத்தில் வந்தது என்பதை சரித்திரத்தில் கூற இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்து விட்டதால் இந்த பதிவு இடப் படுகிறது.
இந்த கதைத் தொடர் சிறுவர் இலக்கியத்தில் மிகவும் புகழ் பெற்றதோடில்லாமல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றும் கூட. ஏனெனில், ஒவ்வொரு கதையின் முடிவிலும் ஒரு கருத்து சொல்லப் பட்டு இருக்கும். அதன் மூலம் சிறுவர்களுக்கு நீதி போதனை புகட்ட இது ஒரு சிறந்த ஊடகமாக உபயோகப் படுத்தப் பட்டு வந்தது.
இதன் மூலம் சொல்லப் படும் கருத்துக்கள் சிறுவர்களின் மனதில் ஆழ இடம் பிடித்தது என்பது மறுக்க இயலாத உண்மை ஆகும். நண்பர் அய்யம்பாலயத்தார் அவர்களை அம்புலிமாமா தொடரின் விக்கிரமாதித்தன் கதைகளை பற்றிய ஒரு ஆய்வுக்கு அழைக்கிறேன்.
அடுத்த காமிக்ஸ் பதிவு மூலம் உங்களை சந்திக்கிறேன், விரைவில்.
நன்றிகள் எனக்கும் பாராட்டுகள் நமக்கும்.

