Wednesday, November 18, 2009

நீங்க நல்லவரா கெட்டவரா?

கழக கண்மணிகளே, உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே,

வணக்கம்.

சமீப காலங்களில் பணிச்சுமை காரணமாக என்னால் பதிவுகள் இடவோ அல்லது கமெண்டுகள் இடவோ இயலவில்லை. சக காமிக்ஸ் நண்பர்கள் மன்னிக்கவும். இந்த ஒரு செய்தியை கேள்விப்பட்டவுடன் என்னால் பதிவிடாமல் இருக்க இயலவில்லை. மணிரத்தினத்தின் நாயகன் படத்தில் வரும் இந்த வசனத்திற்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்று வினவ வேண்டாம். முழவதுமாக படிக்கவும். பின்னர் இருக்கும் தொடர்பை நீங்களே உணர்வீர்கள்.

ஒரு நூலகத்தில், அதுவும் சிறுவர்கள் சரளமாக வந்து செல்லும் ஒரு நூலகத்தில் உள்ள ஒரு காமிக்ஸ் புத்தகத்தை மற்றவர்களை படிக்க விடாமல் செய்ததற்காக நூலகர் ஒருவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். சரி, தன்னுடைய கடமையில் இருந்து தவறியதற்காக அவரை வேலையிலிருந்து எடுத்து விட்டார்கள் என்று தானே நினைக்கிறீர்கள்? ஒரு பார்வையில் அவர் செய்தது சரிதான் என்றாலும் அவர் தன்னுடைய பார்வையில் சமுதாய பொறுப்புணர்ச்சியோடு செயல்பட்டார் என்று அவருடைய ஊர்க்கார்கள் அவரை பாராட்டுகிறார்கள்.
என்ன ஒரே குழப்பமாக இருக்கிறதா? சரி, சரி விளக்கமாக சொல்கிறேன். லீக் ஆப் எக்ஸ்ட்ராஆர்டினரி ஜென்டில்மேன் என்ற கதை உங்களுக்கு தெரியும்தானே? ஒரு மொக்கை படம்கூட வந்ததே? ஆம், அதே தான். அந்த படத்தை சார்ந்த கதையை ஒரு காமிக்ஸ் புத்தக தொடராக வெளியிட்டு வருகின்றனர். அதில் நான்காம் பாகம் தான் பிளாக் டாச்சியர் என்ற புத்தகம். அந்த புத்தகம் தான் நூலகத்தில் வைக்கப் பட்டு இருந்தது. ஒரு காமிக்ஸ் புத்தகம் நூலகத்தில் இருந்தால் தவறில்லை என்று தானே சொல்கிறீர்கள். ஆம், தவறில்லை தான். ஆனால் அந்த சிறுவர்கள் நூலகத்தில் இந்த புத்தகம் இருந்தது தவறாகும் என்று இந்த நூலகருக்கு பட்டது. ஏனென்றால் அந்த புத்தகத்தில் பல பக்கங்கள் முழு நிர்வாண காட்சிகள் இருக்கின்றன. அதனை சிறுவர்கள் படித்தால் அவர்கள் மனம் அலைபாயும் என்ற சிந்தனையில் அந்த நூலகர் நூலக அதிகாரிகளிடம் அந்த புத்தகத்தை நூலகத்தில் இருந்து நீக்க கோரினார்.
ஆனால், விருதுகள் வாங்கிய ஒரு புத்தகத்தை (2007 ஆம் ஆண்டின் சிறந்த காமிக்ஸ்) நீக்க நிர்வாகம் மறுத்து விட்டது. அதனால் மனம் நொந்த நூலகர் அந்த புத்தகத்தை தொடர்ந்து தானே எடுத்து சென்றார். பல மாதங்களாக அவரே ஒரு புத்தகத்தை தொடர்ந்து சென்றதை நூலக நிர்வாகிகள் கண்டித்தனர். பின்னர் வேறு ஒரு வாசகர் அந்த புத்தகத்தை படிக்க கோரி அதனை வான்டட் லிஸ்ட்டில் சேர்த்தார். ஆனால், நூலகர் ஆகியதால் இருக்கும் விசேஷ அதிகாரத்தை பயன்படுத்தி அந்த முயற்சியை தடுத்து விட்டார். ஏனென்றால் அந்த புத்தகத்தை கோரியது ஒரு பனிரெண்டு வயது சிறுமி.
இந்த விடயத்தை கேள்விப்பட்ட நிர்வாகம் அவரை வேலையில்  இருந்து நீக்கி விட்டது. இப்போது சொல்லுங்கள், அந்த நூலகர் நல்லவரா கெட்டவரா?
A
B C D E
Related Posts Widget for Blogs by LinkWithin