கழக கண்மணிகளே, உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே,
வணக்கம்.
முதலில் நான் இந்த வலையுலக நண்பர்களுக்கு என்னுடைய மன்னிப்பை சமர்பிக்கிறேன். அந்த மன்னிப்பின் பிரதிபலிப்பே அருகில் உள்ள இந்த அறிவிப்பு. இனிமேலும் அடுத்தவரை நான் பின்தொடர போவதில்லை. என்னுடைய் சொந்தமான இடுகைகளை இனிமேல் நீங்கள் காணலாம்.
என்னுடைய சிறுவயதில் நான் காமிக்ஸ் படிக்க ஆரம்பித்தபோது, முத்து காமிக்ஸ்'ஐ நெடு நாளாக படித்தாலும், ஏனோ எனக்கு முழு சந்தோஷம் வரவில்லை. பின்னர் லயன் காமிக்ஸ் ஆரம்பித்த போதும், மினி லயன் வெளி வந்த போதும் அதே நிலை தான். ஆனால் திகில் காமிக்ஸ் ஆரம்பித்த போது நிலைமை சற்று மாறியது. ஆனாலும் என்னுடைய அக்கா மகன் (அப்போது நான்காம் வகுப்பில் இருந்தான்) இந்த காமிக்ஸ்'ஐ படிக்க சற்று பயந்தான். ஆனால் மினி லயன் பெரிய அளவில் இரண்டு ருபாய் விலையில் வந்த போது எனக்கு மிகவும் சந்தோஷம் ஏற்பட்டது. ஏனெனில் இந்த புத்தகத்தில் தான் பலப் பல சிறு கதைகள் வந்தது. என்னுடைய அக்கா மகன் மிகவும் சந்தோஷப்பட்டான். நானும்தான்.

அதில் எங்கள் இருவருக்கும் மிகவும் பிடித்த ஒரு கதாபாத்திரமே குண்டன் பில்லி. அனைத்து வயதினரையும் கவரும் இவனது சேட்டைகள் எங்கள் மனதை கொள்ளை கொண்டதில் வியப்பேதும் இல்லை. முதன் முதலில் பில்லி ஒரு கதையில் தோன்றி இந்த வருடம் பிப்ரவரி மாதத்தோடு நூறு வருடங்கள் ஆகின்ற வெளியில் இதைப் பற்றி ஒரு முழு இடுகை இட வேண்டும் என்று எனக்கு தோன்றியது. அதன் விளைவே இந்த அறிக்கை.

குண்டன் பில்லி முதன் முதலில் ஒரு கதையில் தோன்றியது 1908ம் ஆண்டில்தான். பிளீட்வே குழுமத்தில் இருந்த ஒரு பத்திரிக்கையே "த மேக்னட்" (The Magnet) ஆகும். திரு பிரான்க் ரிச்சர்ட்ஸ் (Frank Richards) என்பவர்தான் இந்த கதையின் ஆசிரியர் ஆவார். இவர் தொடர்ந்து இந்த குண்டன் பில்லி தொடரை முப்பதிஒரு வருடங்கள் எழுதினார் (1908 - 1939).




அந்த பள்ளிக்கூடத்தின் உள் கட்டமைப்பு வரைப்படம் இதோ உங்களின் மேம்பட்ட பார்வைக்கு. இது போன்ற பள்ளிகள் நாம் படிக்கும்போது இல்லையே என நான் மிகவும் வருத்தப்பட்ட காலங்கள் உண்டு. திரு வாண்டுமாமா அவர்களை ஒரு முறை சந்தித்த போது இதனை அவரிடம் கூறி என்னுடைய நீண்ட நாள் ஆதங்கத்தை வெளியிட்டு விட்டேன்.

இந்த மேக்னெட் இதழின் சில அட்டைப்படங்கள். வாசக அன்பர்கள் ஒரு விஷயத்தை அறிய வேண்டும். பிளீட்வே குழுமத்தின் ஆரம்ப கால இதழ்களைப்ற்றிய விபரங்கள் எங்குமே தெளிவாக தெரிவிக்கப்படவில்லை. ஆகையால் தான் இது போன்ற தெளிவில்லாத படங்களை வெளியிட வேண்டியதாக போயிற்று. மன்னிக்கவும்.



தீவிர காமிக்ஸ் ஆய்வர்களாகிய திரு சதீஷ், முத்துபேன், விஸ்வா, அய்யம்பாளையம் போன்றவர்கள் குண்டன் பில்லி பற்றிய விபரங்களை தெரிவித்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன்.
திரு பிரான்க் ரிச்சர்ட்ஸ் அவர்களால் எழுதப்பட்ட குண்டன் பில்லி தொடர் மிகவும் பிரபலம் அடைந்ததால் அந்த சிறுகதைகளை எல்லாம் முழு நீள நாவல்களாக மாற்றி எழுதினார். சென்ற நூற்றாண்டின் ஆரம்ப கால கட்டத்தில் இந்த நாவல்கள் மிகவும் பிரபலம் பெற்றவை ஆகும்.
இந்த கதைகள் எதையும் நாம் படிக்க வில்லை என்பதே மிகவும் மனவருத்தம் அளிக்கும் ஒரு விஷயம் ஆகும். ஏனென்றால் இந்த கதைகள் எதையும் திரு விஜயன் அவர்கள் வெளியிடவில்லை என்பது நிதர்சனமான உண்மை.
இந்த நாவல்கள் பிரபலம் பெற்றதால் அவை மீண்டும் மறுபதிப்பு செய்யப்பட்டன. இவற்றையும் மீறி காமிக்ஸ் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க அனைத்து சித்திரக்கதைகளும் ஒரு டைஜஸ்ட் வடிவில் வெளிவந்தது. இவையே பில்லி பண்டர்ஸ் ஓன் (Billy Bunter's Own) என்று வெளிவந்தது. இந்த கொள்கை அடிப்படையிலேயே காக்கை காளி டைஜஸ்ட் வெளிவந்ததாக நியாபகம்
திரு பிரான்க் ரிச்சர்ட்ஸ் அவர்களின் மறைவுக்கு பின்னர், திரு சார்லஸ் ஆமில்டன் (Charles Hamilton) அவர்கள் நாக்-அவுட் (Knock Out) என்ற காமிக்ஸ் இதழில் 1939ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் குண்டன் பில்லியை மைய்யமாக கொண்டு கதைகளை எழுத ஆரம்பித்தார். இந்த தொடருக்கு பிரான்க் மின்னிட் (Frank Minnit) மற்றும் ரெக் பர்லேட் (Reg Parlett) ஆகிய இருவரும் சித்திரம் வரைய ஆரம்பித்தனர். இந்த தொடர் 1963ம் ஆண்டு வரை வெளிவந்தது.
ஆனால் நம்முடைய மினி லயன் இதழில் வெளிவந்த குண்டன் பில்லியன் கதைகள் யாவும் இந்த தொடரில் கூட வெளிவரவில்லை. இந்த தொடருக்கு பின்னர் வாலியண்ட் (Valiant: 1963 - 1976) என்னும் ஒரு காமிக்ஸ் இதழில் வெளிவந்தவையே நமக்கு பரிச்சயமான தொடர் ஆகும். இதோ அந்த தொடரில் வெளிவந்த ஒரு அட்டைப்படம்.
என்ன, இந்த சித்திரங்கள் மிகவும் பரிச்சையமானவையாக தோன்றுகிறதா? அம், இவையே நமது மினி லயனில் வெளிவந்த சித்திரதொடர். ஒவ்வொரு குண்டன் பில்லி கதையும் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டவை ஆகும். எப்பொழுதும் எதையாவது தின்று கொண்டே இருக்க நினைக்கும் பில்லிக்கும் அவரது பிரின்சிபால் மற்றும் சக நண்பர்கள் உடன் ஏற்படும் வேடிக்கையான நிகழ்வுகளே வாடிக்கையாக அமைவது நமக்கு தெரிந்ததே.
பிளீட்வே குழுமத்தில் இருந்து வெளிவந்த இந்த தொடர் நெதர்லாந்து நாட்டில் மிகவும் பிரபலம் ஆனது. அதனால், பிளீட்வே குழுமத்தினர் தங்களின் அனைத்து குண்டன் பில்லி கதைகளையும் நெதர்லாந்து நாட்டிற்க்கு அனுப்பினார். அங்கு, அவை மொழி மாற்றம் செய்யப்பட்டு மிகப்பெரும் வெற்றி பெற்றன என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன? ஒரு காலகட்டத்தில் ஒரிஜினல் தொடர்கள் முடிந்ததால் நெதர்லாந்து நாட்டின் ஓவியர்கள் ஜான் வான் டேர் கூ, ஜெரார்ட் லீவர், ராபர்ட் வான் டேர் கிராப்ட் போன்றவர்கள் தொடர்ந்து வரையா ஆரம்பித்தனர். இது 1981ம் ஆண்டு வரை தொடர்ந்தது. பின்னர் பிரான்க் மின்னிட் மற்றும் ரெக் பர்லேட் ஆகியோர் வரைந்த சித்திரதொடரை மறுபதிப்பு செய்தனர். இவையும் 1991ம் ஆண்டு வரையே தொடர்ந்து. அதன் பின்னர் இந்த தொடர் வெளி வரவில்லை.
குண்டன் பில்லியன் புகழ் நெதர்லாந்து நாட்டில் உச்சத்தில் இருந்த போது 1978ம் ஆண்டு ஒரு திரைப்படம் ஆக வெளிவந்தது. இந்த திரைப்படம் Torrent-ல் டவுன் லோட் முறையில் கிடைக்கின்றது. இதோ, அந்த திரைப்படத்தின் போஸ்டர்.
படவிவரங்கள்- வருடம் : 1978
ஓடும் நேரம் : 94 நிமிடங்கள்
மொழி : டச்சு மொழி (நெதர்லாந்து)
சப்-டைட்டில் : ஆங்கிலம் இயக்கம் : ஹென்க் வான் டேர் லிண்டன்
படத்தின் பெயர் : Billie Turf-Het Dikste Studentje Ter Wereld
இந்த திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மூன்று வருடங்கள் கழித்து மற்றுமொரு திரைப்படத்தை அதே குழுவினர் இன்னுமொரு திரைப்படத்தை வெளியிட்டனர். இதோ அந்த திரைப்படத்தின் போஸ்டர்:
படவிவரங்கள்- வருடம் : 1981
ஓடும் நேரம் : 96 நிமிடங்கள்
மொழி : டச்சு மொழி (நெதர்லாந்து)
சப்-டைட்டில் : ஆங்கிலம் இயக்கம் : ஹென்க் வான் டேர் லிண்டன்
படத்தின் பெயர் : Billy Turf haantie de voorste
இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றியை அந்த திரைப்பட கம்பெனிக்கு ஈட்டியது. அதனால் அதை தொடர்ந்து ஒரு வருடம் கழித்து மற்றுமொரு திரைப்படத்தை அதே குழுவினர் இன்னுமொரு திரைப்படத்தை வெளியிட்டனர். இதோ அந்த திரைப்படத்தின் போஸ்டர்:

படவிவரங்கள்- வருடம் : 1982
ஓடும் நேரம் : 90 நிமிடங்கள்
மொழி : டச்சு மொழி (நெதர்லாந்து)
சப்-டைட்டில் : ஆங்கிலம் இயக்கம் : ஹென்க் வான் டேர் லிண்டன்
படத்தின் பெயர் : Billy Turf contra Kweel
இந்த திரைப்படங்களுக்கு எல்லாம் முன்னோடியாக தொலைக் காட்சி தொடர் ஒன்று குண்டன் பில்லியை மைய்யமாக கொண்டு வந்ததாக கேள்வி. அந்த தொடரை பற்றிய விவரங்களை என்னால் சேகரிக்க இயலவில்லை. ஆனாலும் அந்த தொடரில் பில்லி ஆக நடித்த சிறுவனின் பெயர் ஜெரால்ட் கேம்ப்யன் ஆவார். இதோ அவரின் ஒரு அறிய புகைப்படம்.

மினி லயனில் ஒரே ஒரு முறை மட்டும் பில்லியன் சகோதரி ஆன பெஸ்ஸி வந்ததாக நினைவு. தீவிர லயன் காமிக்ஸ் வாசகர்கள் பின்னுட்டம் மூலம் இதனை வெளிப்படுத்தினால் நான் மிகவும் மகிழ்வேன். இதோ, பெஸ்ஸியை மைய்யமாக கொண்டு வந்த தொடரின் கதைகள்:
இந்தப் படத்தை வாய்ப்பு கிடைப்பவர்கள் தவறாது பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மறக்காமல் உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமாக இட்டுச்செல்லுங்கள். இந்தப் பதிவை பொறுமையுடன் படித்ததற்கு நன்றி!
இது போன்ற பதிவுகளை மேலும் தொடரலாமா என கருத்துரையிடுங்களேன்? தயவு செய்து உங்களின் கருத்துகளை பதிவு செய்து கழக கண்மணிகளாக மாறுங்கள்.
நன்றிகள் எனக்கும் பாராட்டுகள் நமக்கும். இப்போதைக்கு அவ்வளவுதான், மீண்டும் சந்திப்போம். விரைவில்.